இதற்கு மட்டும் மத்திய சட்டம் தேவையா? முதல்வருக்கு பழனிசாமி கிடுக்கிப்பிடி
இதற்கு மட்டும் மத்திய சட்டம் தேவையா? முதல்வருக்கு பழனிசாமி கிடுக்கிப்பிடி
ADDED : ஜூலை 26, 2024 10:32 PM
சென்னை:'குற்ற வழக்கு தொடர்புத் துறை இயக்குனர் பதவியில் இருந்து, வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவை திரும்பப் பெற வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் குற்ற வழக்கு தொடர்புத் துறை இயக்குனர், கடந்த ஜன., 31ல் ஓய்வு பெற்றார். தற்போது குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவை, அப்பதவியில் தி.மு.க., அரசு நியமித்துள்ளது.
பொதுவாக இந்தப் பொறுப்புக்கு, முந்தைய குற்றவியல் நடைமுறை சட்டங்களின்படி, டி.என்.பி.எஸ்.சி., வழியே தேர்வு செய்யப்பட்டு, உதவி வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டோர், பதவி உயர்வின் வழியே நியமிக்கப்படுவது மரபு.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவின்படி, சென்னை ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, குற்ற வழக்கு தொடர்புத் துறை பொறுப்பு இயக்குனராக நியமித்திருப்பது விந்தையானது.
அரசு துறையின் தலைவராக, அரசியல் சார்புள்ள ஒருவரை, தி.மு.க., அரசு நியமித்துள்ளது தவறான முன்னுதாரணம். ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தை எதிர்ப்பது, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்துவது, மறுபுறம் தனக்கு சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக் கொள்வது என, தி.மு.க., இரட்டை வேடத்தை அரங்கேற்றி உள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக, இந்த இயக்குனரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களின் நியாயமான பணி உயர்வு, இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவை, அப்பதவியில் இருந்து அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

