'உள்துறையில் நடப்பது கூட முதல்வருக்கு தெரியவில்லையா'
'உள்துறையில் நடப்பது கூட முதல்வருக்கு தெரியவில்லையா'
ADDED : ஜூன் 02, 2024 02:43 AM
சென்னை:'உள்துறையில் நடப்பது கூட தெரியாமல் முதல்வர் இருப்பது வெட்கக்கேடானது' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை, நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதாக, உள்துறை செயலர் அமுதா அரசாணை வெளியிட்டார். பின்னர் அந்த உத்தரவை இரவில் அவர் திரும்ப பெற்றார்.
இது தொடர்பாக ஜெயகுமார் கூறியுள்ளதாவது:
நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல்தான் இதுவரை முதல்வர் ஸ்டாலின் இருந்து வந்தார். இப்போது அவரது உள்துறையில் நடப்பதுகூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது.
சென்னை உயர் நீதிமன்றம் ஓய்விற்கு ஒரு நாள் முன்னர் துறை ரீதியான பணியிடை நீக்க நடவடிக்கைக் கூடாது என அறிவுறுத்தியும் கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்; அதை மீண்டும் ரத்து செய்தது யார்?
காவல் துறையை கை பொம்மையாக துாக்கிப்போட்டு விளையாடுவதுதான் அரசின் வேலையா? ஆழ்வார்பேட்டையிலேயே இருந்தால் ஆட்சி இப்படிதான் இருக்கும். இந்த அரசு ஸ்டாலினுக்கு கீழ் இயங்கவில்லை என்பது, தற்போது வெளிச்சமாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

