ADDED : ஆக 30, 2024 01:59 AM
சென்னை:'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருகிறது. தமிழகத்தில் மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும்.
அடுத்த இரண்டு நாட்களில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகரலாம்.
வங்கக்கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
இந்த நிலை, செப்., 4 வரை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில், செப்., 2 வரை மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.