ADDED : ஏப் 23, 2024 06:40 AM

சென்னை: தமிழகம், கேரளாவில் ஒருங்கிணைந்த முறையில், நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள், ஏப்., 29ல் துவங்கும் என, வனத்துறை அறிவித்துள்ளது.
மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்க, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வரையாடுகளை பாதுகாப்பதற்கான புதிய திட்டத்துக்கு, 25 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான புதிய திட்டம், 2022ல் துவங்கப்பட்டது.
இதன்படி, வரையாடுகள் எண்ணிக்கை குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்; அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் பாதுகாக்கப்படும் என, அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகம், கேரளாவில் வரையாடுகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஏப்., 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என, தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழக, கேரள எல்லையில் உள்ள புலிகள் காப்பகங்கள், காப்பு காடுகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
இதன்படி, குறிப்பிட்ட சில வரையாடுகளுக்கு, 'ரேடியோ காலர்' கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் நடமாட்டத்தை துல்லியமாக கணக்கிடவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

