சிறிய மருந்தகங்களில் மட்டும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வு; வணிகர்கள் சங்கம் புகார்
சிறிய மருந்தகங்களில் மட்டும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வு; வணிகர்கள் சங்கம் புகார்
ADDED : பிப் 25, 2025 02:27 AM
சென்னை : 'மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிறிய மருந்தகங்களில் மட்டுமே ஆய்வு நடத்துகின்றனர். பெரு நிறுவன மருந்தகங்கள் பக்கம் தலைகாட்டுவதில்லை' என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 42,000 சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் டாக்டர் பரிந்துரையின்றி கருத்தடை மற்றும் துாக்க மாத்திரை வழங்குதல், ரசீது தர மறுப்பு, ஆவணங்கள் பராமரிக்காதது உள்ளிட்டவை கண்டறியப்பட்டால், மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தாண்டில் இதுவரை, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிறிய கடைகளில் மட்டுமே ஆய்வு நடத்துகின்றனர்.
பெரு நிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் நடக்கும் தவறுகளை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் கூறியதாவது:
மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தொடர் நடவடிக்கைகளால், 42,000 விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகிறோம். தவறு செய்யும் மருந்தகங்களில் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம், சிறிய தவறுக்கும் வழக்குப்பதிவு செய்வதால், 40,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதேநேரத்தில், பெருநிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் தயங்குகின்றனர். மருந்து வணிகர்களின் கடைகளில் மட்டும் தேவையற்ற சோதனை நடத்தி, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.