ADDED : ஜூலை 16, 2024 01:50 AM
சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான, செப்.,5ம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, விண்ணப்ப பதிவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள், இன்று முதல், 'எமிஸ்' ஆன்லைன் தளம் வழியே, தங்களின் விபரங்களை, வரும், 24ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருக்கக்கூடாது. கல்வியை வணிக ரீதியாக செயல்படுத்தும், அதாவது கட்டணம் பெற்று தனியே டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள், நடத்தை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியில் உள்ள ஆசிரியர்கள், விருது பெற தகுதியற்றவர்கள் என, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

