ADDED : ஏப் 30, 2024 10:13 PM
சென்னை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு செப்., 14ல், அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'புராதன கட்டடமான ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோவில் விழாக்களுக்கு இடையூறாக அமையும்; பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும்; ராஜகோபுரமும் சேதம் அடைய வாய்ப்புள்ளது. வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்து, கடந்தாண்டு நவம்பரில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.சந்திரசேகரன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''இதே விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது.
''விசாரணையின் போது, எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது என, அறநிலையத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது,'' என்றார்.
அறநிலையத்துறை தரப்பு வாதத்தை ஏற்று, 'ஒரே விவகாரத்துக்கு எதற்கு இத்தனை வழக்குகள்' என கேள்வி எழுப்பிய 'முதல் பெஞ்ச்', 'விடுமுறை கால அமர்வில் இந்த வழக்கை சேர்க்கக் கூடாது' என அறிவுறுத்தி, ஜூலை 2ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.