ADDED : ஜூலை 25, 2024 12:57 AM
சென்னை:'பழனி முருகன் மாநாட்டில், 15 முருகனடியார்களின் பெயரிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கவுள்ளது. இம்மாநாட்டில் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கு, முருகனடியார்களான நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், வாரியார், தேனுார் வரகவி சொக்கலிங்கனார், கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், முருகம்மையார், மாம்பழ கவிராயர், பாலதேவராயர் ஆகிய, 15 பேர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு திருப்பணி, சொற்பொழிவு, இலக்கிய, சமூக, கொடையாளர் மற்றும் அடியார்களுக்கான சேவை புரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அறநிலையத் துறையின், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தங்களின் ஆன்மிக ஈடுபாட்டை உறுதிபடுத்தும் விதமாக, ஆதீனங்கள், ஜீயர்கள் அல்லது கோவில் செயல் அலுவலரிடம் சான்று பெற்று இணைத்து, ஆக., 5ம் தேதிக்குள், mmmviruthupalani2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

