அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு; வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு
அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு; வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு
ADDED : மார் 05, 2025 06:51 PM

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6வது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட் அனுமதியளித்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அரசு வேலை வாங்கி தருவாகக் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், வங்கி மேலாளர், தடவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் உள்ளிட்ட சாட்சிகளிடம் அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில், 6வது சாட்சியான சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில், 6வது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட் அனுமதியளித்தது. மேலும், வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.