சுற்றுச்சூழல் ஆணைய உத்தரவு பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
சுற்றுச்சூழல் ஆணைய உத்தரவு பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
ADDED : ஏப் 11, 2024 08:49 PM
சென்னை:தீர ஆராயாமல் கல் குவாரிக்கான விண்ணப்பத்தை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்திருப்பதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா, ராமபட்டினம் கிராமத்திலுள்ள தன், 5 ஏக்கர் நிலத்தில் கல் குவாரி அமைக்க அனுமதி கோரி, பிரிட்டோ பிரான்சிஸ் என்பவர், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.
'அந்த நிலத்தைச் சுற்றி, ஏராளமான தென்னை மரங்களும், விவசாய பண்ணைகளும் உள்ளன. அவை மட்டுமல்லாது, அப்பகுதியில் இரண்டு கல் குவாரிகளும், ஒரு கல் உடைக்கும் ஆலையும் செயல்பாட்டில் உள்ளன.
எனவே, அங்கு மேலும் ஒரு கல் குவாரிக்கு அனுமதி அளித்தால், அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படும்' எனக்கூறி, பிரிட்டோ பிரான்சிஸ் விண்ணப்பத்தை ஆணையம் நிராகரித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
தென்னை மரங்கள், விவசாய பண்ணைகள் சூழ்ந்திருப்பதாலும், ஏற்கனவே இரு கல் குவாரிகள் இருப்பதாலும், புதிய கல் குவாரிக்கான விண்ணப்பத்தை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது. ஆனால், கல் குவாரிக்கான விண்ணப்பத்தில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா என்று, உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
ஏற்கனவே இரு குவாரிகளும், ஒரு கல் உடைக்கும் ஆலையும் இருக்கும் போது, புதிதாக குவாரி வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற மாநில அளவிலான நிபுணர் மதிப்பீட்டு குழுவின் கவலை பாராட்டுக்குரியது.
ஆனாலும், விண்ணப்பதாரரிடம் குவாரி அமைக்க உள்ள இடத்திலிருந்து, தென்னை மரங்கள், பண்ணைகள் எவ்வளவு துாரத்தில் உள்ளன; மத்திய - மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகளை விண்ணப்பதாரர் மீறியுள்ளாரா என்பதை தீர ஆராய்ந்து, அதன் பின்னரே ஆணையம் முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஆனால், நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரையை ஆராயாமல், அப்படியே ஆணையம் அங்கீகரித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆணையம் தன் கடமையில் இருந்து தவறியுள்ளது. எனவே, கல் குவாரிக்கான விண்ணப்பித்தை மறுபரிசீலனை செய்து, ஆணையம் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

