ADDED : ஆக 01, 2024 02:21 AM
சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில், சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சரோஜா; இவருக்கு எதிராகவும், அவரது கணவருக்கு எதிராகவும், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், குணசீலன் என்பவர் புகார் அளித்தார்.
சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்காக, பலரிடம் இருந்து, 76.50 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், யாருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனவும், புகாரில் கூறப்பட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''சரோஜா, அவரது கணவர் மீதான புகாரில் போதுமான ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. வழக்கில் 34 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
''மனுதாரர்கள் வீட்டுக்குசென்றே, பணம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளன. வழக்கின் விசாரணை தொடர்கிறது. வழக்கை ரத்து செய்யக்கூடாது,'' என தெரிவித்தார்; அதற்கான ஆவணங்களை வழங்கினார்.
இதையடுத்து, சரோஜா தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை ஏற்ற நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.