தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா
தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல்: அமைச்சர் ராஜா
ADDED : ஆக 21, 2024 02:58 AM

சென்னை:தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:
தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களின்படி உற்பத்தியை துவங்கி, வேலைவாய்ப்பு உருவாவது வரை முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். இதற்கென அதிகாரிகள் குழுவையும் நியமித்துஉள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முதல்வரின் வெளிநாட்டு பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 19 நிறுவனங்கள் இன்று உற்பத்தியை துவங்கவுள்ளன. இதன் வாயிலாக, 17,616 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகி உள்ளது.
ஒட்டு மொத்தமாக, 68,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கிடைத்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
கடந்த எட்டு ஆண்டுகளாக கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நிலம் எடுப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இனி, மத்திய அரசு அடுத்தகட்ட பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.
தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. அதனால், தொழில்வளம் பெருகி வருகிறது.
முதல்வரின் அமெரிக்க பயணம் வாயிலாக, தமிழகத்தில் இதுவரை கால் பதிக்காத நிறுவனங்களும், இங்கு தொழில் துவங்கஉள்ளன.
மத்திய அரசு எந்த ஒரு இக்கட்டான சூழலை திணித்தாலும், அதையெல்லாம் தகர்த்தெறிந்து, முதலீட்டாளர்களுக்கு அற்புதமான சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.