சிறிய வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றில் விலக்கு
சிறிய வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றில் விலக்கு
ADDED : ஜூலை 01, 2024 12:58 AM

சென்னை: சிறிய அளவிலான வணிக கட்டடங்களுக்கு, பணிநிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதற்காக, பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பொது கட்டட விதிகளின் அடிப்படையில், கட்டு மான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில், விதிமீறல்களை தடுக்க, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக இருந்தது.
இதனால், சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவோர், குடிநீர், மின்சார இணைப்பு பெறுவதில், அதிக கால தாமதம் ஏற்பட்டது.
பின், பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கை அடிப்படையில், எட்டு வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, பணிநிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவானது. சிறிய அளவிலான வணிக கட்டடங்களுக்கும் பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
சட்டசபையில் இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, சிறிய வணிக கட்டடங் களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, 3,229 சதுரடி வரையிலான, 45 அடி உயரமுடைய சிறிய அளவிலான வணிக கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிப்பதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
இதனால், சிறிய அளவிலான வணிக கட்டடங்களை கட்டுவோர், பணிநிறைவு சான்றுக்காக காத்திருக்காமல், விரைவாக மின்சார, குடிநீர் இணைப்பு பெறலாம்.