ADDED : ஏப் 30, 2024 05:29 AM

புதுடில்லி,: கிறிஸ்துவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட வெறுப்பு பேச்சு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, செப்., 9ம் தேதி வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2022, அக்., 22ல், 'யு டியூப் சேனல்' ஒன்றுக்கு பேட்டியளித்தார். தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹிந்து கலாசாரத்தை அழிப்பதற்காக, கிறிஸ்துவ அமைப்புகள்தான் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, வி.பியுஷ் என்பவர் அளித்த புகாரின்படி, அண்ணாமலை மீது வெறுப்பு பேச்சில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை எதிர்த்து, அண்ணாமலை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மன்களுக்கு தடை விதிக்க மறுத்தது.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய பேட்டியின் மொழிபெயர்ப்புகளை பார்த்த உச்ச நீதிமன்றம், இதில் வெறுப்பு பேச்சு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என, குறிப்பிட்டது. அண்ணாமலை மீதான வழக்கின் விசாரணையைத் தொடர்வதற்கு தடை விதித்து, கடந்த, பிப்., 26ல் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை, செப்., 9ம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது. அதுவரை, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்று கூறியுள்ளது.

