ADDED : மே 24, 2024 04:12 AM

சென்னை : ஆறு விரைவு ரயில்களுக்கு பல்வேறு ரயில் நிலையங்களில் அளிக்கப்பட்ட நிறுத்தம் வசதி நீட்டிக்கப்படுகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெரிசல் மிக்க ரயில் நிலையங்களில் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலோடு விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கப்படுகிறது. சில மாத சோதனை முயற்சிக்கு பின், இந்த நிறுத்தங்களுக்கான வசதி நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் திருப்பத்துாரிலும்; தாம்பரம் - செங்கோட்டை வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் கல்லிடைக்குறிச்சியிலும்; எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் உளுந்துார்பேட்டையிலும்; திருச்செந்துார் - எழும்பூர் விரைவு ரயில் குத்தாலத்திலும்; திண்டுக்கல் - விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணியர் ரயில்கள் வடமதுரையிலும் தற்போது அளிக்கப்பட்டுள்ள நிறுத்தம் வசதி மறு உத்தரவு வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.