சூரியசக்தி மின் திட்டம் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் வசதி
சூரியசக்தி மின் திட்டம் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் வசதி
ADDED : ஏப் 24, 2024 09:04 PM
சென்னை:மத்திய அரசு, நாடு முழுதும், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சூரிய வீடு இலவச மின் திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 1 கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கி.வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம்.
சூரிய வீடு இலவச மின் திட்டத்தில் மின் நிலையம் அமைக்க விரும்புவோர், மத்திய அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மின் நிலையம் அமைத்ததும், மானிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
தமிழக மின் வாரியம், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை, 45,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பலருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தெரியவில்லை.
எனவே, பிரிவு அலுவலகங்களில், சூரியசக்தி மின் திட்டத்திற்கு இலவசமாக விண்ணப்பித்து தரும் வசதியை துவக்குமாறு, மின் வாரியத்திற்கு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

