அரசிடம் விற்க விவசாயிகள் ஆர்வம்; நெல் வரத்து 18 லட்சம் டன்னாக உயர்வு
அரசிடம் விற்க விவசாயிகள் ஆர்வம்; நெல் வரத்து 18 லட்சம் டன்னாக உயர்வு
ADDED : பிப் 22, 2025 04:36 AM

சென்னை : விவசாயிகளிடம் இருந்து அதிக நெல் வருவதால், உடனுக்குடன் அரிசியாக மாற்றும் பணியில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2024 செப்டம்பர், 1ல் துவங்கியது.
அதிக விலை
இதற்காக, நெல் விளைச்சல் அதிகம் உள்ள தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு, 2,450 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு, 2,405 ரூபாயும் வழங்கப்படுகிறது.
நெல்லுக்கு வெளிச்சந்தையில் வழங்குவதை விட, அரசு அதிக விலையை வழங்குகிறது. எனவே, பலரும் அரசுக்கு நெல் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், நேற்று முன்தினம் வரை, 18.03 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில், 13 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த ஆண்டை விட இந்த சீசனில் இதுவரை, 5 லட்சம் டன் நெல் கூடுதலாக கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து நெல் வரத்து உள்ளது. எனவே, நெல்லை அரிசியாக மாற்றும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நேரடி கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல், பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது, வாணிப கழகத்திற்கு சொந்தமான, 21 அரிசி ஆலைகள் மற்றும், 643 தனியார் அலைகளில் அரிசியாக மாற்றப்படுகிறது.
கொள்முதல்
நடப்பு சீசனில், எதிர்பார்த்ததை விட நெல் வரத்து அதிகம் உள்ளது. ஒரு ஆலையின் மாத மொத்த அரவை திறனில், 25 சதவீத அளவுக்கு நெல் வழங்கப்படுவது வழக்கம்.
அது தற்போது, 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதனால், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனுக்குடன் அரிசியாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.