ADDED : ஆக 16, 2024 02:22 AM
சென்னை:கலப்பட விதைகளின் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்த, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி பருவம் துவங்கியுள்ளது.
காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள், மூலிகை செடிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியிலும், விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதற்காக வேளாண் விரிவாக்க மையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தரமான விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கையிருப்பில் உள்ள தரமற்ற விதைகள், மற்ற விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விதைகள், தனியார் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் விதைகளை, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்த விதைகளை சாகுபடி செய்த பின், பயிர்கள் பாதிக்கின்றன; மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். சில ஆண்டுகளாக தரமற்ற விதைகள் புழக்கம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், வேளாண் துறையால் சான்றளிக்கப்படும் தரமான விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் விதைகளை பெற்று, அவற்றின் தரத்தை விரைந்து உறுதி செய்து தரும்படி, விதை சான்றளிப்பு துறைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. விதைகளை பயன்படுத்துவதில், விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கவும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.