கட்டட அனுமதியை புதுப்பிக்க கட்டணம்; நகராட்சி வசூலிக்க அதிகாரம் உள்ளது
கட்டட அனுமதியை புதுப்பிக்க கட்டணம்; நகராட்சி வசூலிக்க அதிகாரம் உள்ளது
ADDED : ஆக 12, 2024 04:52 AM
சென்னை : 'கட்டட அனுமதிக்கான அவகாசம் முடிந்த பின், அதை புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்கள் மீது, நகராட்சி சார்பில் கட்டணம் வசூலிப்பது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
திருவேற்காடு நகராட்சி எல்லைக்குள் கட்டடம் கட்டுவதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் திருவேற்காடு நகராட்சியிடம், சென்னையைச் சேர்ந்த ஜமால்ஸ் என்ற நிறுவனம் விண்ணப்பித்தது.
மேல்முறையீடு
சி.எம்.டி.ஏ., கோரிய கட்டணங்களை, ஜமால்ஸ் நிறுவனம் செலுத்தி, திட்ட அனுமதி பெற்றது. பின், திருவேற்காடு நகராட்சியை அணுகி, கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை பெற்றது. அதற்கான கட்டணத்தையும் செலுத்தியது.
சி.எம்.டி.ஏ., வழங்கிய திட்ட அனுமதியும், நகராட்சி வழங்கிய கட்டட அனுமதியும் மூன்று ஆண்டுகளுக்கானது.
கட்டட அனுமதி வழங்கும் போது, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் கட்டுமானத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், பூர்த்தி செய்யாத பட்சத்தில், மீண்டும் அனுமதி கேட்டு புதிதாக விண்ணப்பிக்கும்படியும், திருவேற்காடு நகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
அதை ஏற்று, கட்டுமானத்தை ஜமால்ஸ் நிறுவனம் துவங்கியது. ஆனால், சி.எம்.டி.ஏ., மற்றும் திருவேற்காடு நகராட்சி அளித்த கால வரம்புக்குள் கட்டுமானம் பூர்த்தியாகவில்லை.
இதையடுத்து, திட்ட அனுமதியை புதுப்பிக்கும்படி, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றது. திருவேற்காடு நகராட்சியும் கட்டட அனுமதியை புதுப்பித்தது; ஆனால், ஏழு நாட்களுக்குள், 35 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி உத்தரவிட்டது.
திருவேற்காடு நகராட்சியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜமால்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
'கட்டணம் வசூலிக்காமல், திட்ட அனுமதியை சி.எம்.டி.ஏ., புதுப்பித்ததால், கட்டட அனுமதியை புதுப்பிக்க திருவேற்காடு நகராட்சி கட்டணம் வசூலிக்க முடியாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, திருவேற்காடு நகராட்சி ஆணையர் மேல்முறையீடு செய்தார்.
விசாரணை
மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நகராட்சி சார்பில், வழக்கறிஞர் ஆர்.மோகன்தாஸ் ஆஜராகி, ''மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானத்தை பூர்த்தி செய்யாததால், நகராட்சி சட்டப்படி புதிதாக கட்டணம் வசூலிக்க, நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.
உத்தரவு ரத்து
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மூன்று ஆண்டுகளுக்கு கட்டட அனுமதியை நகராட்சி வழங்கி உள்ளது. அது, காலாவதியாகி விட்டது. எனவே, அனுமதியை புதுப்பிக்க அல்லது நீட்டிக்கக் கோரும் விண்ணப்பத்தை, புதிய விண்ணப்பமாகவே கருத முடியும்.
அதனால், மீண்டும் கட்டட அனுமதி வழங்குவதற்காக கட்டணம் வசூலிக்க, சட்டப்படி நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது.
சி.எம்.டி.ஏ., வசூலிக்கும் கட்டணத்துக்கும், நகராட்சி வசூலிக்கும் கட்டணத்துக்கும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை.
நகராட்சியிடம் இருந்து கட்டட அனுமதி பெறுவது கட்டாயமானது; திட்ட அனுமதியையும், கட்டட அனுமதியையும், சமமாக பாவிக்க முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.