ஊட்டியில் பெண் மூளை சாவு :உடல் உறுப்புகள் தானம் இறந்தும் பலருக்கு உயிர் கொடுத்த தியாக தாய் எமிலி
ஊட்டியில் பெண் மூளை சாவு :உடல் உறுப்புகள் தானம் இறந்தும் பலருக்கு உயிர் கொடுத்த தியாக தாய் எமிலி
UPDATED : ஜூலை 12, 2024 10:42 PM
ADDED : ஜூலை 12, 2024 10:06 PM

ஊட்டி:ஊட்டியை சேர்ந்த எமிலி என்பவர் மூளை சாவு அடைந்து விட்டதால், அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.நீலகிரி மாவட்டத்திலேயே முதன்முறையாக உடல்தானம் செய்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியை சேர்ந்தவர் எமிலி,62. இவர் கணவர் லாரன்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு, கில்பட், கென்னிநெல்சன், கிளமன்ட், ரெஜினாமேரி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு கடந்த, 7ம் தேதி திடீரென உடல்நிலை பாதிப்பட்டு, ஊட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று திடீரென அவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அவரின் பிள்ளைகள், எமிலியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இன்று இரவு, 8:00 மணிக்கு, ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில், கண், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தானம் வழங்கப்பட்டன. அதில், சிறுநீரகம்; கல்லீரல் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டன. கண் மட்டும் ஊட்டி மருத்துவ கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தும் பலருக்கு உயிர் கொடுத்த அந்த தியாக தாயின் ஆத்மா சாந்தியடைய அவரின் குடும்பத்தினரும், ஊட்டி மக்களும் பிரார்த்தனை செய்தனர்.

