கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு உயரழுத்த மின் கோபுரங்கள் சேதம்
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு உயரழுத்த மின் கோபுரங்கள் சேதம்
ADDED : ஆக 03, 2024 01:04 AM

திருச்சி:கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திருச்சியில் தடுப்புச் சுவர் மற்றும் இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. அதனால், மீண்டும் கொள்ளிடம் நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து, 1.70 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கும் அந்த தண்ணீர், மேலணையில் இருந்து, 30,000 கன அடி காவிரியில் பாசனத்துக்கும், உபரி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.
மண் அரிப்பு
கொள்ளிடத்தில், 90,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சியில், திருவானைக்காவல் - நம்பர் 1 டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நேப்பியர் பாலம் கட்டப்பட்டது.
ஏற்கனவே, இங்கிருந்த பழைய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால், நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், 6.50 கோடி ரூபாயில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், நேற்று முன்தினம், அந்த தடுப்புச்சுவர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது.
அதே பகுதியில் இருந்த இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள், நேற்று முன்தினம் இரவிலும், நேற்று அதிகாலையிலும் சாய்ந்து விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மற்ற உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க, மின் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:
ஆறு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர், 15 மீட்டர் நீளத்துக்கு உடைந்துஉள்ளது.
நீரின் வேகத்தால் தான், இரண்டு உயரழுத்த மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
வரக்கூடாது
வேறு மின் பாதை வழியாக, பொது மக்களுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில், 52 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. காவிரி படித்துறை மற்றும் கரையோரங்களுக்கு, தேவையில்லாமல் பொது மக்கள் வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.