ஆய்வகத்தில் வெளிப்படைத்தன்மை உணவு வணிகர்கள் வலியுறுத்தல்
ஆய்வகத்தில் வெளிப்படைத்தன்மை உணவு வணிகர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 06, 2024 02:50 AM
சென்னை:தமிழகத்தில் உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகங்களில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் உணவு பொருட்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் பல்வேறு வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அவற்றின் தரத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்வர். அப்போது, பொருட்களின் மாதிரியை எடுத்து தரத்தை பரிசோதிக்க, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், தஞ்சையில் உள்ள அரசு ஆய்வகங்களுக்கு அனுப்புவர்.
ஆய்வு முடிவுகளை இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இல்லையேல், அதற்கான விளக்கத்தை, மாவட்ட நியமன அலுவலருக்கு உணவு பகுப்பாய்வாளர் தெரிவிக்க வேண்டும்.
ஒரு பொருளின் ஆயுள் காலம் முடிந்த நாளுக்கு மேலாகவும் ஆய்வக முடிவுகளை வெளியிடவில்லை. இதனால், 2021ல், பல வணிகர்களுக்கு அபராதம் விதித்ததுடன், குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தற்போது, ஆய்வகங்களின் முடிவுகளில் வெளிப்படை தன்மை இல்லை. எனவே, வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் வகையில், ஆய்வக முடிவுகளை மாவட்ட நியமன அலுவலர் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அபராதம் வசூலிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட வணிகர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக, மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக அரசின் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.