அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு சசிகலா அனுப்பியுள்ள படிவம்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு சசிகலா அனுப்பியுள்ள படிவம்
ADDED : ஏப் 23, 2024 12:35 AM
சென்னை: அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கப் போவதாக கூறி வரும் சசிகலா, கட்சியினர் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியை துவக்கி உள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் கட்சி லோக்சபா தேர்தலை சந்தித்துள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, தேர்தல்களை சந்தித்து வருகிறார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை துவக்கி, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கட்சியினர் மூன்று பிரிவாக செயல்படும் நிலையில், அவர்களை ஒன்றிணைக்கப் போவதாக, அவ்வப்போது சசிகலா கூறி வருகிறார். ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும் அவர் எடுக்கவில்லை என, அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர்.
லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், அமைதியாக இருந்தார். தேரத்ல் முடிந்த நிலையில், தனக்கு ஆதரவாக கட்சியினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிய முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கி உள்ளார். அதன்படி, கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி உள்ளார். அதை பூர்த்தி செய்து, தனக்கு அனுப்பும்படியும் கூறியுள்ளார்.
அந்தப் படிவத்தில், பெயர், முகவரி, தொலைபேசி எண், 'இ - மெயில்' முகவரி, ஆதார் எண், கட்சி மாவட்டம், ஒன்றியம், சட்டசபை தொகுதி, கல்வித் தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, கடந்த 2017 ஜன., 1ல் வகித்த பொறுப்பு, தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகியவை கேட்கப்பட்டு உள்ளன.
இப்படிவத்தை பூர்த்தி செய்து, சென்னை போயர்ஸ் கார்டனில், சசிகலா வசிக்கும் ஜெ.ஜெயலலிதா இல்லம் முகவரிக்கு நேரிலோ, தபாலிலோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

