ரூ.20.57 கோடி மோசடி வழக்கு: வங்கி மாஜி அதிகாரிக்கு '7 ஆண்டு'
ரூ.20.57 கோடி மோசடி வழக்கு: வங்கி மாஜி அதிகாரிக்கு '7 ஆண்டு'
ADDED : மார் 01, 2025 12:43 AM

சென்னை: போலி கடன் கடிதம் வாயிலாக, இந்தியன் வங்கிக்கு, 20.57 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்த வழக்கில், வங்கியின் முன்னாள் அதிகாரி மற்றும் தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு, தலா ஏழு ஆண்டுகளும், மேலும் இருவருக்கு தலா 5 ஆண்டுகளும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியன் வங்கி மண்டல மேலாளர் துரைராஜ்; 2013 பிப்ரவரி, 13ல், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'போலி கடன் கடிதம் வாயிலாக, 2012 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில், வங்கிக்கு, 20 கோடியே 57 லட்சத்து 97,800 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்ததில், 2012ல் இடைக்கழிநாடு இந்தியன் வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்த இக்னேஷியஸ் தீபம், போலி கடன் கடிதம் வாயிலாக, தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இக்னேஷியஸ் தீபம், தனியார் நிறுவனத்தை சேர்ந்த முத்தையா, முரளிதர், ப்ரியலட்சுமி ஆகியோர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், 2013ல், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், முன்னாள் வங்கி மேலாளர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.பி.வடிவேலு பிறப்பித்த தீர்ப்பு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, வங்கி முன்னாள் மேலாளர் இக்னேஷியஸ் தீபத்துக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 2.10 லட்சம் ரூபாய் அபராதம்; தனியார் நிறுவன உரிமையாளர்கள் முத்தையா, முரளிதர் ஆகியோருக்கு, தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா, 45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ப்ரியலட்சுமிக்கு, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும், 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

