ம.பி.,யிலிருந்து பூண்டு வரத்து; கிலோ 50 ரூபாயாக சரிந்தது
ம.பி.,யிலிருந்து பூண்டு வரத்து; கிலோ 50 ரூபாயாக சரிந்தது
UPDATED : மார் 12, 2025 05:51 AM
ADDED : மார் 12, 2025 05:45 AM

பெரியகுளம் : மத்திய பிரதேசத்தில் வெள்ளைப்பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால், தேனி மாவட்டம் வடுகப்பட்டி மார்க்கெட்டில் கிலோ 50 ரூபாயாக விலை சரிந்தது.
மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், காஷ்மீர் பகுதிகளில் விளையும் வெள்ளைப் பூண்டுகள், பெரியகுளம் அருகே வடுகப்பட்டி கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு 100 கமிஷன் கடைகள் உள்ளன.
வியாழன், ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் நடைபெறுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாரம், 100 - 150 டன் பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பரில், ஹிமாச்சல் பூண்டு முதல் ரகம் கிலோ, 500, காஷ்மீர் பூண்டு, 400 ரூபாய்க்கு விற்பனையானது.
பிப்ரவரி துவக்கத்திலிருந்தே வெள்ளைப் பூண்டு வரத்து அதிகரித்தது. முதல் ரகம் பெரும்பூண்டு கிலோ, 200 ஆக குறைந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பூண்டு அறுவடை துவங்கியது. அதிக விளைச்சலால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 25 லாரியில் தலா, 10 டன் எடையுள்ள வெள்ளைப் பூண்டு வந்தது.
இதனால், விலை சரிந்து, முதல் ரகம் கிலோ, 100 ரூபாய்க்கும், அடுத்த ரகம் கிலோ, 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.