'டாப் 10' நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி ரூ.97,229 கோடியாக அதிகரிப்பு
'டாப் 10' நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி ரூ.97,229 கோடியாக அதிகரிப்பு
ADDED : பிப் 24, 2025 12:36 AM

திருப்பூர்:'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 97,229 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.
நம் நாட்டுடன் 'வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்' மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட, 'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி புள்ளிவிபரத்தை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 97,229 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 85,107 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் 28,008 கோடி ரூபாயில் இருந்து, 13.80 சதவீதம் அதிகரித்து நடப்பாண்டில் 32,618 கோடி ரூபாயாக உள்ளது.
பிரிட்டனுக்கு 8,382 கோடி ரூபாய்; ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 7,432 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், 'உலகளாவிய சவால்களால், கடந்த இரண்டு ஆண்டுகள் ஏற்றுமதி மந்தமாக இருந்தது.
'நீண்ட இடைவெளிக்கு பின், 'டாப் - 10' பட்டியல் நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, நெதர்லாந்துக்கான ஏற்றுமதி, 32.40 சதவீதம் அதிகரித்துள்ளது' என்றனர்.