சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற இண்டியா கூட்டணி பொய் பிரசாரம் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு
சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற இண்டியா கூட்டணி பொய் பிரசாரம் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு
ADDED : மே 21, 2024 08:00 AM

போடி : ''சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெற பிரதமர் மோடிக்கு எதிராக இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இது இந்த தேர்தலில் எடுபடாது, மீண்டும் பிரதமராக மோடி வருவார்,'' என, அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் கூறினார்.
போடியில் தாய் ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் பெரிய கும்பிடு விழாவில் பங்கேற்ற அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின் அவர் கூறியதாவது : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி வரும் குற்றச்சாட்டிற்கு இத்தொகுதி எம்.எல்.ஏ.,வான பன்னீர்செல்வம் தான் பதில் கூற வேண்டும். சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மதவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி பேசியதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிறுபான்மை மக்களின் காவலர்கள் போல ஓட்டுகளை பெறுவதற்காக வரிந்து கட்டி கொண்டு பொய் பிரசாரம் செய்வது இந்த தேர்தலில் எடுபடாது.
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சியில் மத கலவரம் இல்லாமல் இந்தியா அமைதி பூங்காவாக உள்ளது. இது பிரதமர் மோடியின் ஆளுமையை காட்டுகிறது என்றார்.

