'ரூம் போட்டு யோசித்து' நிலம் அபகரித்த கோபாலகிருஷ்ணன் பின்புலம் குறித்து வெளுத்து வாங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி
'ரூம் போட்டு யோசித்து' நிலம் அபகரித்த கோபாலகிருஷ்ணன் பின்புலம் குறித்து வெளுத்து வாங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி
ADDED : ஆக 17, 2024 12:30 AM
சென்னை:சென்னை சோழிங்கநல்லுாரில் நடந்த நில அபகரிப்பு புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சோழிங்கநல்லுாரில் எனக்கு சொந்தமான, 18.25 சென்ட் நிலத்தை, கோபாலகிருஷ்ணன் என்பவர் உட்பட சிலர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளனர். என் உயிருக்கும், சொத்துக்கும், உரிய பாதுகாப்பு வழங்கும்படி, போலீஸ் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வழக்கறிஞர் வி.எஸ்.செந்தில்குமார் ஆஜராகினர்.
சிவில் வழக்கு
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சோழிங்கநல்லுாரில் உள்ள நிலம் தொடர்பாக, தங்கள் உரிமையை நிலைநாட்ட, மனுதாரரும், கோபாலகிருஷ்ணனும் முயற்சிக்கின்றனர். கடந்த மே 13 வரை இந்த நிலம் கார்த்திக் வசம் இருந்தது.
இந்த நிலம் தொடர்பாக மனுதாரர், ஆலந்துார் நீதிமன்றத்தில் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
முன்னதாக, 2021 மார்ச்சில் மனுதாரருக்கு எதிராக, ஸ்ரீவத்சன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புலன் விசாரணை முடிந்து, ஆலந்துார் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த மே 14ல், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது ஆட்கள், இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, கட்டுமானத்தை இடித்துள்ளனர்; இடத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது ஆட்களின் சட்டவிரோத செயலுக்கு ஆதரவளித்துள்ளனர்.
இதையடுத்து, நீலாங்கரை இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி, உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
நீலாங்கரை சரக உதவி ஆணையர் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் சுத்தமானவர் என்று சான்றிதழ் கொடுத்து, புகாரை முடித்து வைத்துள்ளார்.
போலீசார் துணை
கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள இந்தச் சொத்தை குறிவைத்து, போலீஸ் துணையுடன் அபகரித்துள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் எதிர்கொள்வது, முதல் முறையல்ல; ரவுடிகளுடன் கைகோர்த்து, நில உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது வழக்கமாகி விட்டது.
இதில், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால், போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்.
நில அபகரிப்பாளர் என மனுதாரரும், கோபாலகிருஷ்ணனும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். நில அபகரிப்பு செயலுக்கு ஒப்புதல் பெறும் வகையில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தை கோபாலகிருஷ்ணன், கடந்த ஆண்டு நவம்பரில் நாடியுள்ளார்.
ஆவணங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், கோபாலகிருஷ்ணனே பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாமல் தோல்வி அடைந்ததால், வேறு வடிவத்தில் நில அபகரிப்பை மேற்கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார். விரிவான புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
புகார்களை விருப்பு வெறுப்பின்றி, திறமையாக விசாரிக்க முடியாத நிலையை, புலனாய்வு அமைப்புகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது வேதனையளிக்கிறது.
இந்த நிலை நீடித்தால், ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு, போலீசிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது. போலீஸ் மீது நம்பிக்கை இழந்து விடுவர்.
இது, அராஜகத்துக்கு தான் வழிவகுக்கும். அதிகாரமிக்க அரசியல்வாதிகள் அல்லது ரவுடிகளிடம், அவர்கள் அடைக்கலம் புகுந்து விடலாம். இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது.
ரவுடிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு நடப்பதும், அதனால் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் சில மாதங்களாக நடப்பதையும் பார்க்கும் போது, போலீசாரின் செயல்பாடுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டுஉள்ளது.
இறுதி அறிக்கை@@
எனவே, மனுதாரர் அளித்த புகாரை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இது தகுதியான வழக்கு என்பதால், வழக்கை பதிவு செய்து, விசாரணையை சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கும்படி தென்மண்டல சி.பி.ஐ., இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது.
இறுதி அறிக்கையை, சி.பி.ஐ., நான்கு மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.