அரசு பஸ் தற்காலிக டிரைவர்கள் ஒப்பந்த பணியில் சேர நெருக்கடி
அரசு பஸ் தற்காலிக டிரைவர்கள் ஒப்பந்த பணியில் சேர நெருக்கடி
ADDED : ஜூலை 15, 2024 12:53 AM
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், தற்காலிக டிரைவர்களை நிறுத்தி விட்டு, ஒப்பந்த டிரைவர்களை நியமிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில், தற்காலிக டிரைவர்களாக பணிபுரியும் சிலர், இதுபற்றி கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், 'சி.எல்' என்ற, தற்காலிக பணியாளர்கள் தான் அதிகம் பணியாற்றுகின்றனர். தற்போது ஆளுங்கட்சியினர் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, குறைந்த சம்பளத்தில், ஒப்பந்த டிரைவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, நெல்லை மற்றும் சென்னையில் உள்ள பூந்தமல்லி, திருவொற்றியூர் பணிமனைகளில் ஒப்பந்த டிரைவர்கள் பணியில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேலை செய்வோர், தேவைக்கேற்ப போக்குவரத்து கழகங்களில் நிரந்தரமாக வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பை கெடுக்கும் வகையில், தற்காலிக பணியாளர்களான எங்களையும் ஒப்பந்த பணியாளராக சேரும்படி வற்புறுத்துகின்றனர். இல்லாவிட்டால், எங்களை பணி நீக்கம் செய்வதாக, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனவே, தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'தற்காலிக பணி என்றால், ஆட்கள் தேவைப்படும் போது மட்டுமே வேலைக்கு அழைப்போம். ஒப்பந்த பணி என்றால், தொடர்ந்து வேலை கிடைக்கும்' என்றனர்.

