ADDED : ஜூலை 01, 2024 02:59 AM

சேலம்: சேலத்தில் சென்ட்ரல் சட்ட கல்லுாரியின், 40ம் ஆண்டு விழா, கல்லுாரி நிறுவனர் தனபால் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் சிலையை திறந்து வைத்து பேசியதாவது:
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதித்துறை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறையவே உள்ளன. குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை தண்டிப்பது அரசின் கடமை. அதை சரிவர செய்யவில்லையெனில் அரசுக்கு தான் பாதிப்பு.
நாட்டில் சட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த, 20 ஆண்டுகளில், 70 முதல் 80 சதவீதம் வரை பெண்கள் நீதித்துறையில் பணிபுரிவர்.
இவ்வாறு பேசினார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில், 77 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இன்னும் கூடுதல் நீதிமன்றங்கள், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறக்கப்படும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நீதித்துறை செயல்பாடு மிக முக்கியம். அதனால், நீதித்துறையின் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்து வருகிறோம்.
இவ்வாறு பேசினார்.