கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்
ADDED : ஜூலை 12, 2024 11:58 PM
சென்னை:கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க, தண்டனையை அதிகரிப்பது அவசியம் என்ற கருத்து எழுந்தது.
அதைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்போருக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 29ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இப்புதிய சட்டத்தின்படி, மது வகை அல்லது மதி மயக்கும் மருந்தை தயாரிக்க, எடுத்துச் செல்ல, வைத்திருக்க மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இச்செயல்கள் நடக்க அனுமதிக்கும் கட்டடத்தின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளருக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டால், விற்றவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். பிற நிகழ்வில், 10 ஆண்டுகள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தில் உள்ள விதிகளின்படி, உரிமம் பெறாமல் எந்த இடத்திலும் மது அருந்த அனுமதித்தல் கூடாது.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அந்த இடத்தை தாசில்தார் நிலைக்கு குறையாத அலுவலர் மூடி முத்திரையிட வேண்டும்.
இது போன்ற குற்றங்களை செய்து, தண்டனை பெற்ற ஒருவரை, அந்தப் பகுதியில் இருந்தே வெளியேற்றுவதற்கு, மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால், நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் புதிய சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

