100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
ADDED : ஜூன் 28, 2024 02:15 AM

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:
திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்துார், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம் ஆத்துார், கும்பகோணம், மேலுார், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆத்துார், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி, ராமநாதபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறுவிளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்
நாட்டில் முதல்முறையாக, சென்னை அருகே மேலக்கோட்டையூரில் பிரத்யேக ஒலிம்பிக் 'பை சைக்கிள் மோட்டார் கிராஸ்' ஓடுபாதை அமைக்கப்படும்
கன்னியாகுமரியில் களரி, அடிமுறை, சிலம்பம், வர்மம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக மையம் அமைக்கப்படும்
மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும்
மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களுக்கு, ஒருநாள் உணவுப்படி 250 ரூபாயில் இருந்து 350 ரூபாயாகவும், சீருடை மானியம் 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாகவும், உபகரண மானியம் 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்
அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கு, ஒலிம்பிக் விளையாட்டு மானியம் 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகளுக்கு, 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், அரசு பணி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

