திருவள்ளுவரின் சீடனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி: கவர்னர் ரவி
திருவள்ளுவரின் சீடனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி: கவர்னர் ரவி
ADDED : மே 25, 2024 02:06 AM
சென்னை:''நான் இங்கு கவர்னராக இருப்பதை விட, திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதில் பேருவகை கொள்கிறேன்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, நேற்று மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு சென்று, கவர்னர் ரவி வழிபட்டார். மாலையில் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:
என் பள்ளி பருவத்தில், திருவள்ளுவர் குறித்து அறிந்தேன். கடந்த 1964ம் ஆண்டு சரஸ்வதி பூஜையன்று, பள்ளி நுாலகத்தில் ஹிந்தி புத்தகம் ஒன்றில், பாரதத்தின் தென்கோடியில், ஒரு மஹான் இருந்தார். அவர் தான் திருவள்ளுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்து.
அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்து, திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொது வாழ்விற்கு வந்த பின், அதன் மீதான நாட்டம் அதிகரித்தது.
தமிழகத்திற்கு வந்ததும், திருக்குறளை தான் முதலில் வாங்கி படித்தேன். வாழ்க்கையின் அனைத்து சூழலையும், திருக்குறள் தெளிவாக விவரித்துள்ளது. ஒரு மனிதன் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது ஆகியவற்றை வரையறுத்துள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நேசித்தவர் திருவள்ளுவர்.
திருக்குறள் வாழ்க்கையின் அங்கம். இது தான் வாழ்வின் முழு தர்ம சாஸ்திரம். நான் இங்கு கவர்னராக வீற்றிருப்பதை விட, திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன்.
மனித குலத்திற்கு இறைவன் அளித்த கொடையாக திருக்குறளும், திருவள்ளுவரும் உள்ளனர். அவர் இந்த மண்ணில் பிறந்ததற்கு, நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
வைகாசி அனுஷம் தினம் மட்டும் திருவள்ளுவர் தினமல்ல. ஆண்டின் அனைத்து நாட்களும் திருவள்ளுவர் தினம்தான்.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

