ADDED : ஜூன் 26, 2024 07:17 AM
சட்டசபையில் பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் அறிவிப்புகள்:
தரமான பட்டுக்கூடு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு, 2,350 பட்டு விவசாயிகளுக்கு, 24.73 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பட்டு விவசாயிகளுக்கு 1.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பட்டு வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்
பட்டு நுாற்பு பிரிவை மேம்படுத்தும் வகையில், 3.45 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக பட்டு நுாற்பு பிரிவுகள் அமைக்கப்படும்
நாமக்கல் மாவட்டம், அணைகட்டிபாளையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பட்டுக்குழு அங்காடி வளாகம் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
வெண்பட்டுக்கூடு உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய், 75,000 ரூபாய், 50,000 ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்
சென்னையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்படும்
தமிழக கைவினை பொருட்களை பிரபலப்படுத்தும் வகையில், டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடத்தப்படும்.
ஹஜ் பயண மானியம்
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் அறிவிப்புகள்:
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாய், 1,200 ரூபாயாகவும்; மூக்கு கண்ணாடி உதவித் தொகை, 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர்கள் குடும்பத்தை சேர்ந்த, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதிதாக ஒரு சிறுபான்மையினர் நல கல்லுாரி மாணவர் விடுதி துவக்கப்படும்
மக்கள் அதிகம் வரும், தொன்மையான ஆறு தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, 5 கோடி ரூபாய் வழங்கப்படும்
முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும், தகுதி வாய்ந்த ஹஜ் புனித பயணியருக்கு தலா, 25,000 ரூபாய் வழங்கப்படும்.

