துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை ரூ.5,500 கோடியில் பணிகள் துவக்கம்: வேலு
துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை ரூ.5,500 கோடியில் பணிகள் துவக்கம்: வேலு
ADDED : ஜூன் 28, 2024 02:12 AM
சென்னை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான, இரண்டடுக்கு மேம்பால சாலைக்கு, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்: விளையாட்டு ஒவ்வொருவருக்கும் முக்கியம். தொகுதிக்கு ஒரு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு ஐ.டி.ஐ., துவக்க வேண்டும். மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 10 லட்சம் இளைஞர்களை நியமித்து, மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
இலவச வேட்டி சேலை, பொங்கலுக்கு வழங்குவது தாமதமாகிறது என்பது பிரச்னையாக உள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக செய்தீர்கள். காரணம் மே மாதத்திலேயே நுாலுக்கு 'டெண்டர்' விடப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் விடவில்லை.
அமைச்சர் காந்தி: இந்த ஆண்டு டிச., 31க்குள் இலவச வேட்டி சேலை வழங்கப்படும். அதற்கான வேலை துவக்கப்பட்டுள்ளது. விரைவில், 'டெண்டர்' விடப்படும்.
ஈஸ்வரன்: பன்றி வேட்டையாடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கருவுற்ற பன்றியை சுடக்கூடாது என்கிறீர்கள். கருவுற்ற பன்றி என்பது எப்படி தெரியும்; இதற்கு விளக்கம் வேண்டும். சென்னை மதுரவாயல் சாலை இரண்டு அடுக்காக வரும் என்று கூறப்பட்டது; இன்னும் வரவில்லை.
அமைச்சர் வேலு: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பால சாலை தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 5,500 கோடி ரூபாயில் செயல்படுத்த, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ஜி.எஸ்.டி., வரியை விலக்கிக் கொள்ள வேண்டும். பாலம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு கடிதம் எழுதி இருந்தது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பது மத்திய அரசு தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், மாநில அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதி அளித்து, அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில், அந்த மேம்பால சாலைப்பணி துவக்கப்படும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

