மும்பையில் பிறந்தவர்களுக்கு தமிழகத்தில் பிறப்பிடச் சான்று உயர் நீதிமன்றம் உத்தரவு
மும்பையில் பிறந்தவர்களுக்கு தமிழகத்தில் பிறப்பிடச் சான்று உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 14, 2024 07:13 PM
மதுரை:மும்பையில் பிறந்த சகோதரர்கள் 2 பேருக்கு தமிழகத்தில் பிறப்பிடச் சான்று வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மும்பையை சேர்ந்த முரளி செல்லையா தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம் முசிறி அருகே சித்துாரில் பிறந்தேன். பள்ளிப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பை தமிழகத்தில் முடித்தேன். மனைவி கோமதி பொன்னாங்கன். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர். இருவரும் மும்பையில் 'ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்தில் பணிபுரிகிறோம். மகன்கள் கவுரவ் முரளி, கவுதம் முரளி மும்பையில் பிறந்தனர். அங்கு படித்தனர். இருவரும் மைனர்கள். தமிழகத்தில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்க பிறப்பிடச் சான்று தேவை.
ஆன்லைனில் விண்ணப்பித்தோம். மகன்கள் தமிழகத்தில் வசிக்கவில்லை; மும்பையில் பிறந்ததால் சான்று வழங்க முடியாது என முசிறி துணைத் தாசில்தார் நிராகரித்தார். அதை ரத்து செய்து சான்று வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:
ஒரு பெண் குவைத்தில் பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பு படித்தார். தமிழக மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர நீட் எழுதினார். பிறப்பிடச் சான்று தேவை. அதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். அப்பெண் குவைத்தில் பிறந்தவர். அப்பெண் அல்லது அவரது பெற்றோர் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிக்கவில்லை என தாசில்தார் நிராகரித்தார். இதை எதிர்த்து அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.
'ஒருவர் பணியின் காரணமாக மாநிலத்தில் வசிக்கவில்லை என்பதற்காக நிரந்தர வசிப்பிடத்தை இழந்துவிட மாட்டார். மனுதாரரின் தந்தை குவைத்தில் வேலை செய்கிறார். பெற்றோர் அங்கு வசிப்பதால் மனுதாரர் பிறந்தார். தாத்தா, பாட்டி தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மனுதாரரை தமிழர் என மட்டுமே அழைக்க முடியும். நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் ஸ்ரீரங்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் என்பதற்குரிய பிறப்பிடச் சான்றை தாசில்தார் வழங்க வேண்டும்' என ஏற்கனவே ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மனுதாரரின் மகன்கள் மும்பையில் பிறந்தனர் என்பதற்காக, விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு ஒரு காரணமாக கூற முடியாது. மனுதாரர் முசிறி தாலுகாவில் பிறந்தவர். அவர் தமிழர் என்பது தெளிவாகிறது. அவரது வேர்கள் தமிழகத்தில் உள்ளன. அவரது மனைவி தமிழர். பொள்ளாச்சியில் பிறந்தவர். இதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இச்சூழலில், விண்ணப்பத்தை நிராகரிப்பது தவறானது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரானது. நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பிறப்பிடச் சான்றை முசிறி துணைத் தாசில்தார் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

