ADDED : ஜூலை 27, 2024 12:06 AM
சென்னை:'நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரலாம்.
இன்றும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
இதில், பல்வேறு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 30 வரையிலான நாட்களில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

