கச்சத்தீவு திருவிழா செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பு பாரம்பரிய திருப்பயணக்குழு கோரிக்கை
கச்சத்தீவு திருவிழா செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பு பாரம்பரிய திருப்பயணக்குழு கோரிக்கை
ADDED : மார் 01, 2025 03:03 AM
ராமநாதபுரம்: இலங்கை கச்சத்தீவில் மார்ச் 14, 15ல் நடக்கும் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு செல்லும் பாராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயணக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயணக்குழு தலைவர் நல்லதம்பி முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் செலுத்த கட்டணமின்றி பயணிகளை அழைத்துக்கொண்டு பாரம்பரியமாக கச்சத்தீவு பயணம் செல்லும் நாட்டுப்படகுகள், விசைப்படகுகளுக்கு 100 லிட்டர் டீசல் மானியமாக வழங்க வேண்டும்.
திருப்பயணக்குழு சார்பில் 8 நாட்டுப்படகுகள், 2 விசைப்படகுகளில் 166 பயணிகள் திட்டமிட்டபடி திருவிழா செல்லவுள்ளனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கச்சத்தீவு திருவிழா வருவதால் தமிழக மீனவர்கள் திருவிழாவிற்கு செல்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு பாராம்பரிய திருப்பயணக்குழுவினர் திட்டமிட்டபடி பயணிப்போம் என்றும், அவர்கள் பயணிக்கும் படகுகளுக்கு பாதுகாப்பும் கோரியுள்ளது போராட்ட மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.