ADDED : ஜூன் 22, 2024 01:27 AM
சென்னை:கள்ளச்சாராய பலிகள் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, ஐகோர்ட்டில் அ.தி.மு.க., சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், “ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்விஅடைந்து விட்டது. கடந்த ஆண்டில் மரக்காணத்தில் இப்படி நடந்த போதே, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வும், மக்களும் போலீசில் புகார் அளித்தனர்.
''சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தார். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,” என்றார்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற அவசியமில்லை,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து, அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் வந்த பின் ஓராண்டில் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் எப்படி நடந்தது? பழைய சம்பவத்தில் பாடம் கற்கவில்லையா?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது கலெக்டரும், போலீசாரும் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்குமே.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
கள்ளக்குறிச்சி, மரக்காணம் சாராய பலி சம்பவங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 26க்கு தள்ளிவைத்தனர்.

