ADDED : செப் 01, 2024 01:19 AM
சென்னை: மலையாள சினிமா படப்பிடிப்பின்போது, 'கேரவன்' வாகனத்தில் ரகசிய கேமரா வைத்து, நடிகையர் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, நடிகர்கள் ரசிப்பதாக நடிகை ராதிகா குற்றம்சாட்டியுள்ளார்.
மலையாள சினிமா உலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கேரள அரசு அமைத்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் உலுக்கி உள்ளது.
இந்நிலையில், நடிகை ராதிகா நேற்று அளித்த பேட்டி:
நடிகையருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது, மலையாள சினிமாவில் மட்டுமில்ல; தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து சினிமாவிலும் உள்ளது.
மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து, மொபைல் போனை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதுபற்றி விசாரித்தபோது, நடிகர், நடிகையர் ஓய்வெடுக்கும், 'கேரவன்' வாகனத்தில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகையர் உடை மாற்றுவதை படம் பிடித்து, அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்து, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். பயந்துபோன நான், கேரவனில் உடைகளை மாற்றாமல், ஹோட்டல் அறையில் மாற்றினேன்.
இந்த சம்பவம் குறித்து, சக நடிகையரிடம் சொல்லி எச்சரிக்கை செய்தேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை.
இங்கு சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது. சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை, நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்க வேண்டும்.
காவல் துறையில் புகார் தெரிவித்தால், தேவையற்ற கேள்விகள் வரும். நாம் சொன்னதை நிரூபிக்க முடியாது. பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக தைரியமாக புகார் கொடுக்கும் சூழல் உருவாக வேண்டும்.
இது தொடர்பாக, நடிகர் மோகன்லாலிடம் பேசியிருக்கிறேன். இந்த காலம் வேறு. எனவே, சினிமாவில் உள்ள பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைநடத்த உள்ளதாக கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.