தனுஷ்கோடி நினைவு சின்னம்; பாதுகாப்பு நிதி ஒதுக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தனுஷ்கோடி நினைவு சின்னம்; பாதுகாப்பு நிதி ஒதுக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
ADDED : ஏப் 14, 2024 03:44 AM

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் வரலாற்று நினைவு சின்னங்களை பாதுகாக்க மற்றும் அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் திருமுருகன் தாக்கல் செய்த மனு:
பாம்பன் தீவின் தென் கிழக்கு முனையில் அமைந்துள்ள பழமையான நகரம் தனுஷ்கோடி. இது, 1964ல் புயலால் அழிந்தது. பழைய தனுஷ்கோடி 1964க்கு முன் இந்தியாவின் முக்கிய இடங்களில் ஒன்று.
அடிப்படை வசதிகள்
இலங்கை செல்லும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியருக்கு சொர்க்கமாக இருந்தது. 1964 வரை அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. மீனவர்கள் வசித்தனர். புயலால் அழிந்ததால் மீனவர்களை ராமேஸ்வரத்திற்கு அரசு மாற்றியது.
அங்கு வாழ்க்கையை நடத்துவது சிரமமாக இருந்ததால், பலர் பழைய தனுஷ்கோடியில் குடியேறினர். தற்போது, 300 பேர் அங்கு மீன்பிடி தொழில் செய்கின்றனர். தாவுக்காடு, பாரடி, முகுந்தராயர் சத்திரத்தில் மீனவர்கள் வசிக்கின்றனர்.
பழைய தனுஷ்கோடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாவுக்காடுவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கழிப்பறை, குடிநீர், மின் இணைப்பு, சாலை வசதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு போதிய கட்டடம் கட்ட வேண்டும்.
பழைய தனுஷ்கோடியில் எஞ்சியுள்ள தபால் நிலையம், விநாயகர் கோவில், மருத்துவமனை உட்பட பழமையான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மீனவர் கிராமங்களில் மின் இணைப்பு, பொதுக் கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
பழைய தனுஷ்கோடி வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல என அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அரசால் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னமும் இல்லை. பழமையான கட்டடங்கள் புயலால் அழிந்தன. சில எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளன.
மேலும், 100 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்களை நிபுணர்கள் குழுவின் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்ற பிறகே பாதுகாக்க முடியும்.
இது கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கீழ் வருவதால், மாலை 5:00 மணிக்கு பின், காலை, 10:00 மணிக்கு முன் தனுஷ் கோடிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதில்லை.
இங்கு வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. வளர்ச்சி பணி மேற்கொள்வது வனத்துறை சட்டத்தை மீறுவதாகும். இங்கு, 1964 டிச., 22ல் வீசிய புயலால் தனுஷ்கோடி நகரம் முற்றிலும் அழிந்தது. 1,800 பேர் இறந்தனர். அதன் பின் நிலையான வீடுகள் ஏற்படுத்தப்படவில்லை. இது உயர் அலை எல்லையில் உள்ளது. புயல், உயர் அலைகள் அபாயம் உள்ளதால் வளர்ச்சி பணியின் போது சேதத்தை ஏற்படுத்தும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மணல் காற்றினால் மணலால் மூடப்படுகிறது. காற்றால் மணல்மேடுகள் உருவாகின்றன. இதனால் நிலையான வீடுகளை அமைத்து தரும் நிலை இல்லை.
கடத்தல் சம்பவங்கள்
ராமேஸ்வரம் நடராஜபுரம், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மீனவர்களுக்கு நிரந்தர வீடுகள் உள்ளன. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் வழங்கப்பட்டுள்ளது. முகுந்தராயர் சத்திரம், தாவுக்காடு காப்புக் காடுகளாகும். தனுஷ்கோடி, அரிச்சல்முனை இந்தியாவின் முனையாக உள்ளது.
அகதிகள், வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய வாய்ப்புள்ள பகுதி. சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.
அரிச்சல்முனை வரை சாலை வசதி உள்ளதால் மீன், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளன. இது தொடர்ந்தால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது. வீடற்றவர்களை கண்டறியும் பட்சத்தில் பாம்பனின் அரசு புறம்போக்கு அனாதீனம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தனுஷ்கோடியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி வீடற்றவர்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான நிதியை விரைவில் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை பராமரிப்பதற்கான தொகையை கலெக்டர் மற்றும் கல்வித்துறை அனுமதிக்க வேண்டும்.
நினைவு சின்னங்களைப் பாதுகாக்க மற்றும் அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

