தனியாருடன் சேர்ந்து குடியிருப்பு திட்டம் :அறிவிப்பை வாபஸ் பெற்றது வாரியம்
தனியாருடன் சேர்ந்து குடியிருப்பு திட்டம் :அறிவிப்பை வாபஸ் பெற்றது வாரியம்
ADDED : செப் 09, 2024 05:58 AM
சென்னை : தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால், கூட்டு சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கான அறிவிப்பை, வீட்டு வசதி வாரியம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, வாரியம் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், புதிதாக அறிவிக்கப்படும் பல்வேறு குடியிருப்பு திட்டங்களுக்கு, நிலம் கிடைப்பது சிக்கலாக உள்ளதால், தனியாருடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த வாரியம் முடிவு செய்தது.
இதன்படி, 2022 - 23ம் நிதியாண்டில், 'திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில், தனியாருடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்' என்று, அறிவிக்கப்பட்டது.
தற்போது, தனியார் பங்கேற்புடன் ஓசூரில் செயல்படுத்த இருந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வாரியம் கைவிட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் பங்கேற்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவானது. இதில், குறிப்பிட்ட சில இடங்களில் தனியாருடன் கைகோர்ப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
ஓசூரில், 59 கோடி ரூபாயில், 125 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் அறிவிப்பை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். அரசிடம் இதற்கான ஒப்பு தல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 2022 அக்டோபரில் பிறப்பிக்கப் பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள், வாரியத்துடன் கைகோர்க்க ஆர்வம் காட்டாததால் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வீட்டுவசதி வாரியத்தின் இந்த முடிவால், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில், தனியாருடன் இணைந்து அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.