நிதி வராத போது மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் * கனிமொழி எம்.பி., கேள்வி
நிதி வராத போது மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் * கனிமொழி எம்.பி., கேள்வி
ADDED : ஆக 20, 2024 08:11 PM
திருநெல்வேலி:''மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கான பெருமளவு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்,'' என கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி,அந்தியூர் செல்வராஜ், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் கனிமொழி அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில் தான் ஒண்டிவீரன் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும், அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாரபட்சம் இல்லாமல் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை; மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி வரவில்லை; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி கிடைக்கவில்லை. இப்படி எதுவும் கிடைக்காத நிலையில் மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

