சட்டசபை ஒளிபரப்புக்கு எவ்வளவு நாட்கள் ஆய்வு: ஐகோர்ட் கேள்வி
சட்டசபை ஒளிபரப்புக்கு எவ்வளவு நாட்கள் ஆய்வு: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஏப் 19, 2024 01:10 AM
சென்னை:'சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு குறித்து, எவ்வளவு நாட்கள் ஆய்வு செய்யப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்; லோக் சத்தா கட்சியின் தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கில், தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரி, அ.தி.மு.க., கொறடா வேலுமணி மனுத்தாக்கல் செய்தார்.
மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, 'மற்ற மாநிலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஏழு மாநிலங்களில் இருந்து விபரங்கள் பெற்றுள்ளோம். மீதி உள்ள மாநிலங்களில் இருந்து விபரங்களை பெற்ற பின், நேரடி ஒளிபரப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார்.
அதைத் தொடர்ந்து, வழக்கு மீண்டும் முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''சில மாநிலங்களில் இருந்து தான் பதில் வந்துள்ளது.
நேரடி ஒளிபரப்பு குறித்து சபாநாயகர் ஆய்வு செய்கிறார். முழுமையான தகவல் கிடைத்த பின், இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
இதையடுத்து, 'இந்த விஷயத்தில் எவ்வளவு நாட்கள் ஆய்வு செய்யப்படும்' என்று கேள்வி எழுப்பிய முதல் பெஞ்ச், ஏதேனும் இறுதி முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை, ஜூன் 25க்கு தள்ளி வைத்தது.

