'மனிதக்கழிவு மனிதர் அகற்றும் அவலம் தமிழகத்தில் இனி கூடாது'
'மனிதக்கழிவு மனிதர் அகற்றும் அவலம் தமிழகத்தில் இனி கூடாது'
ADDED : ஜூன் 14, 2024 07:08 AM

திருப்பூர் : ''மனித உயிர்களுக்கு மதிப்பளித்து, இனி எங்கும் மனிதர்கள் கொண்டு கழிவுகளை அகற்றுவதை தடை செய்ய வேண்டும்,'' என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தேசிய துாய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன், 'இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தோல் பதனிடும் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர், உணவு விடுதி கழிவுகளால் ஆன கழிவுநீர் தொட்டி, மனித மலம் செல்லும் கழிவு நீர் கால்வாய் முதலியவற்றில் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யும் அவலம் பெருமளவில் நடக்கிறது. இறப்புகள் அதிகமாக நடக்கிறது' என்று கூறியுள்ளார்.
சமத்துவம், சமூக நீதி பேசும் திராவிட ஆட்சியில் தான் மனிதர்களே, கழிவுகளை அகற்றும் கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. சில ஆண்டுகள் முன், சுப்ரீம் கோர்ட், மனிதர்களை கழிவுநீர் கால்வாயில் இறக்கி, சுத்தம் செய்வதற்கு, கடும் கண்டனம் தெரிவித்து, அதை முற்றிலுமாக தடை செய்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மீறி இந்த அரசு நடக்கிறது.
தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி இனி எங்கும் மனிதர்கள் கொண்டு கழிவுகளை அகற்றுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.
துாய்மை பணிகளுக்கு வேண்டிய நவீன கருவிகளை வாங்குவதற்கும், துாய்மை பணியாளர்களுக்கு வேண்டிய கையுறை, முக கவசம், நவீன கருவிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

