தமிழ் கற்று கொடுத்த ஆசிரியரின் குடும்பத்திற்கு உதவும் ஐ.ஏ.எஸ்.,
தமிழ் கற்று கொடுத்த ஆசிரியரின் குடும்பத்திற்கு உதவும் ஐ.ஏ.எஸ்.,
ADDED : மே 03, 2024 04:59 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி பட்டு 80. இவர்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமசாமி திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று 2017ல் இறந்தார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாலச்சந்திரன் தனக்கு உள்ள தமிழ் ஆர்வத்தை ஊட்டிய தமிழாசிரியர் ராமசாமி இறந்த பிறகும் குடும்பத்தின் தேவைகளை அறிந்து இன்று வரை நிறைவேற்றி வருகிறார்.
அதன்படி நேற்று முன்தினம் தஞ்சாவூருக்கு வந்த பாலச்சந்திரன் ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்; வீட்டின் கூரையை சீரமைப்பதாக உறுதி அளித்தார்.
இது குறித்து பட்டு கூறியதாவது: பாலச்சந்திரனுக்கு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரியராக என் கணவர் இருந்தார். பாலச்சந்திரனுக்கு தமிழ் மீது இருந்த பற்று இருவரையும் நெருக்கமாக்கியது. பாலசந்திரனின் தமிழ் வசன உச்சரிப்புகளால் வியந்து போன என் கணவர் அவருடன் நெருங்கி பழகினார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியானதும் பாலச்சந்திரன் என் கணவரை தேடி வீட்டுக்கே வந்தார். என்னையும், என் கணவரையும் கோல்கட்டாவுக்கு அழைத்து சென்று தமிழ் சங்கம் சார்பாக நடந்த நிகழ்ச்சிகளில் என் கணவரை சிறப்புரையாற்ற வைத்தார்.
தற்போது வரை ஆண்டுக்கு ஒரு முறையாவது எங்கள் வீட்டுக்கு அவர் வந்து விடுவார். இன்று வரை என் மகனாக இருந்து, நான் கேட்காமலேயே எங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

