மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை விபரம் கேட்கிறது ஐகோர்ட்
மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை விபரம் கேட்கிறது ஐகோர்ட்
ADDED : ஆக 23, 2024 12:07 AM
சென்னை:மாநிலம் முழுதும், சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை குறித்த விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்; இந்த விவகாரத்தில், 2009ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜராகி, “சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சட்டத்துக்கு உட்பட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட காவல் தலைமையகத்துக்கும், டி.ஜி.பி., அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, 2009ல் இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
“தற்போது, வேதாரண்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த மாவட்டத்தில் சுற்றிய மனநலம் பாதித்த 15 பேர் மட்டுமே காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநிலம் முழுதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் இல்லை,” என்றார்.
அதற்கு அரசு தரப்பில், 'மாநிலம் முழுதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்குடன் இதை சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாநிலம் முழுதும் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை பற்றிய விபரங்களை, இரண்டு வாரத்தில் அறிக்கையாக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.