அனுமதியின்றி என்.சி.சி., முகாம் நடத்தினால் தனியார் பள்ளி அங்கீகாரம் ரத்து: அமைச்சர்
அனுமதியின்றி என்.சி.சி., முகாம் நடத்தினால் தனியார் பள்ளி அங்கீகாரம் ரத்து: அமைச்சர்
ADDED : ஆக 22, 2024 11:04 PM
சென்னை:''பள்ளி கல்வித்துறை அனுமதி இல்லாமல் முகாம் நடத்தக்கூடாது. அதை மீறினால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.
இதில், பாடநுால் கழகம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட, 'சென்னை டூ மெட்ராஸ்' என்ற ஓவிய, புகைப்பட பரிசு நுாலை, அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியருக்கு தொல்லை கொடுத்தது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளின் அறிக்கை பெறப்பட்டது. அது, போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதுபோல, வேறு எங்கும் நடக்காத வகையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் எந்த முகாம் நடத்த திட்டமிட்டாலும், தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தி, அசம்பாவிதங்கள் நடந்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக தவறு நடந்தால், வெளிப்படையாக புகார் அளித்து, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிகளின் மீது தான் பெற்றோருக்கு நம்பிக்கை வரும்.
அதேபோல, தனியார் பள்ளி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட குறைகளை உடனடியாக சரி செய்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், தலைமை ஆசிரியரே ஆலோசகராக செயல்பட்டு, குழந்தைகளின் குறைகளை ஆற்றுப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க, 80 டாக்டர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.