ADDED : ஜூலை 05, 2024 09:43 PM
சென்னை:'விளம்பரம் பார்த்தால் பணம்' எனக்கூறி மோசடி செய்த வழக்கில், கோவையை சேர்ந்த, 'மை வி3 ஆட்ஸ்' என்ற செயலியின் உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஆனந்தன், 51, என்பவர், 'மை வி3 ஆட்ஸ்' என்ற செயலியை வடிவமைத்துள்ளார்.
இவரின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பதிவிடப்படும் விளம்பர வீடியோக்களை பார்த்தால், 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை பணம் கிடைக்கும்; அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்தாலும் பணம் கிடைக்கும் எனக்கூறி, வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் தடை சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத வைப்பு நிதித் திட்டங்கள் தடை சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், செயலியின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது.
அதன்படி, 'டான்பிட்' என்ற நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.மலர் வாலண்டினா முன், நேற்று காலை சக்தி ஆனந்தன் சரணடைந்தார். அவரை, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.