நெல்லை ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம் கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது கூலிப்படையை ஏவியவர் யார் என விசாரணை
நெல்லை ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம் கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது கூலிப்படையை ஏவியவர் யார் என விசாரணை
ADDED : மே 08, 2024 01:54 AM
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் தனசிங், கூலிப்படையினரால் கொல்லப்பட்டு, பின் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இதை உறுதி செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, நெல்லை மாவட்ட சிறப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஜெயகுமார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எழுதிய இரு கடிதங்களும், அவர் மரண பயத்தில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
கடிதத்தில் முழுக்க முழுக்க தனக்கு பிறர் அளிக்க வேண்டிய தொகை குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், அதையெல்லாம் கட்டாயம் வசூலித்தாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் யார் யாரிடம் எல்லாம் கடன் வாங்கினார். அப்படி வாங்கிய கடனில் திருப்பி செலுத்தப்பட்டது எவ்வளவு; செலுத்தப்பட வேண்டியது எவ்வளவு என்பது குறித்தெல்லாம், ஒரு இடத்தில் கூட கோடிட்டு காட்டவில்லை.
விசாரணையில், அவர் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவோரிடம் இருந்து, 40 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருக்கிறார். அந்தக் கடனை அவர் முறையாக திருப்பி செலுத்தவில்லை.
அவரை வெளியுலகிற்கு அரசியல் பிரமுகராகவே தெரியும். அதைக்கடந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்துள்ளார். பல கோடி ரூபாயை, ரியல் எஸ்டேட் வாயிலாக அனாயசமாக சம்பாதித்தவர், ஒப்பந்தப் பணிகள் எடுத்து செய்பவராகவும் இருந்துள்ளார்.
இதற்காகவே நிறைய கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. துவக்கத்தில் என்ன ஏதென்று புரியாமல் தான் விசாரணையை துவக்கினோம். அடுத்தடுத்த கட்டங்களில், அவருடைய மொபைல் போனை ஆய்வு செய்தோம். அதில், யாரிடம் இருந்தெல்லாம் அவருக்கு எந்த சமயங்களில் அழைப்புகள் வந்துள்ளன என்பதை பார்த்தோம்.
ஜெயகுமாருக்கு கடன் கொடுத்தவர்களே, அவரை அதிகம் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரிந்தது. பின், ரகசியமாக அவர்களை பற்றி விசாரித்த போது, ஜெயகுமார் குறித்த முழு விபரங்களும் தெரிய வந்திருக்கின்றன. பணம் பெற்று பலருக்கு திருப்பி கொடுக்காமல் இருந்ததை தொடர்ந்து, அவர்கள் பணத்தை கேட்டபோது, தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை வைத்து எதுவும் செய்ய முடியும் என்று மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்களில் பலரும் ஜெயகுமாரை, கூலிப்படையை ஏவி மிரட்டி உள்ளனர். அதற்கெல்லாம் ஜெயகுமார் அசைந்து கொடுக்கவில்லை. அதன்பின்னரே, அவரை கூலிப்படை வாயிலாக கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. கூலிப்படையை ஏவியவர் யார் என விசாரணை தொடருகிறது.
ஒவ்வொரு கூலிப்படைக்கும் கொலை செய்வதில் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அந்த வகையில், ஜெயகுமார் காலை ஒயரால் கட்டி கொலை செய்து, அதன் பின் எரித்துள்ளனர். இப்படிப்பட்ட கூலிப்படையினர், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் உண்டு. அவர்களில் யாரோ ஒரு தரப்பு தான் கொலை செய்திருக்க முடியும்.
ஜெயகுமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை செய்வதற்காக தீக்குளித்திருந்தால், கால் பாதம் எரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதோடு, அங்கிருந்த ஓலைகள் எரிந்ததில் புகையையும், சாம்பலையும் அவர் சுவாசித்திருப்பார். அதெல்லாம் அவருடைய நுரையீரலில் படிந்திருக்கும். 'போஸ்ட்மார்ட்டம்' அறிக்கையில் அப்படி எதுவுமே தென்படவில்லை. அதனால், கொலை செய்யப்பட்டுத்தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதை ஊர்ஜிதம் செய்ததோடு, எந்தக் கூலிப்படையினர் இந்த வேலையை செய்தனர் என்பதை அறிய, பல வகைகளிலும் விசாரணை தொடருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெயகுமார் மரணம் - தங்கபாலு பேட்டி, விசாரணை
- நமது நிருபர் -

